மாவட்ட செய்திகள்

தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் மனு

ஊட்டி–கோத்தகிரி சாலையில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர், நடைபாதை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பி மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த காட்சிமுனை பகுதிக்கு செல்ல ஊட்டிகோத்தகிரி சாலையில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இங்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்த சாலையை தரமில்லாமல் சீரமைப்பதால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. எனவே இந்த சாலையை நல்ல தரமான முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் அவலாஞ்சி பகுதிக்கு செல்லும் சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த இரு சாலைகளையும் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே உள்ள அணிக்கொரை பகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: அணிக்கொரை கிராமத்தில் கூட்டுறவு ரேஷன்கடை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு மண்எண்ணெய் வாங்கி கொண்டு இருந்த 87 ரேஷன்கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் முதல் மண்எண்ணெய் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு கியாஸ் சிலிண்டர் இணைப்பை மட்டுமே பெற்றுள்ளனர். எனவே மேற்கண்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு தொடர்ந்து மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகி மயில்சாமி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கியுள்ள மனு கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஒருசில நுகர்வோருக்கு சமையல் எரிவாயு மானியம், வங்கிகள் மூலம் முறையாக கிடைப்பது இல்லை. இதனால் மத்திய அரசிற்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

எனவே நுகர்வோருக்கு மானியதொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கியாஸ் சிலிண்டர் விற்பனை நிலையங்களில் கியாஸ் சிலிண்டரின் விலை மற்றும் மானியம் ஆகியவற்றின் தகவல்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.