காரைக்கால்
காரைக்கால் அரசு மருத்துவமனை அருகே உள்ள மருந்து கிடங்கு வீதியை சேர்ந்தவர் மேரி புளோரா (வயது 77). இவர் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனது உறவினர் தேத்திரு மேரியுடன் (52) வசித்து வருகிறார். நேற்று மதியம் மேரி புளோரா வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.