மாவட்ட செய்திகள்

கண்ணாடி விரியன் பாம்புக்கு முதுகுதண்டு அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் நடந்தது

மதுரையில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் முதுகுதண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

சேலம்,

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் முல்லை நகரில் ஒருவரின் வீட்டு முன்பு கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த திருநகரில் உள்ள ஊர்வன அமைப்பை சேர்ந்த விஸ்வநாத், சாகா ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று பாம்பை பார்த்தனர். அப்போது அந்த பாம்பின் முதுகு தண்டுவட எலும்பில் அடிபட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் நாகமலைபுதுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் தல்லாகுளம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கண்ணாடி விரியன் பாம்பை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பாம்புக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில், பாம்புக்கு முதுகு தண்டு எலும்பு விலகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பாம்புக்கு மேல் சிகிச்சை அளிக்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர் அசோகன் பாம்புக்கு சிகிச்சை அளித்தார். அப்போது அவர் பாம்புக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வசதி இங்கு இல்லாததால், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பாம்பை கொண்டு செல்லுமாறு ஊர்வன அமைப்பை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் கண்ணாடி விரியன் பாம்பு சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பாம்பை அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் பாம்புக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனை ஆய்வு செய்தனர். இதை அடிப்படையாக கொண்டு டாக்டர்கள் பாம்புக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சைக்காக பாம்புக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அசோகன், அமர்நாத் மற்றும் மருத்துவ குழுவினர் பாம்புக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கண்ணாடி விரியன் பாம்பு சத்தியமங்கலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாம்பு முழுமையாக குணம் அடைந்த பின்னர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதர்களுக்கே அடிபட்டால் சிலர் பார்த்து விட்டு கல்மனதோடு சென்று விடுகிறார்கள். ஆனால் பாம்பிற்கு பாதிப்பு என்றதும் அதை காப்பாற்றுவதற்காக தன்னார்வ அமைப்பினர் அடுத்தடுத்து எடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதுபோன்று அனைவரிடமும், அனைத்து விலங்குகளிடமும் மனிதநேயத்துடன் எல்லோரும் செயல்படும் போது அன்பு தழைத்தோங்கும் என்பதில் சந்தேகமில்லை.