மூலக்குளம்
பூமியான்பேட்டையில் தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோஷ்டி மோதல்
அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). பெயிண்டர். இவருக்கும், பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்த முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினரும் கோஷ்டி களாக மோதிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்களான வேலா, சண்முகம் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட முருகன், அப்பாஸ், கார்த்திக், சிவகுரு, சதீஷ் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
கொலை வழக்காக மாற்றம்
எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பாலாஜி, அஜித், கார்த்திக், சண்முகம், ஜே.ஜே.நகர் வேலன், மணி, முதலியார்பேட்டை மனோ ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேலா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.