நன்னிலம்,
சாலைமறியல்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள சரபோஜிராஜபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர், 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சரபோஜிராஜபுரத்தை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் அடையாள அட்டைகளை அலுவலகத்திற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வேலை அடையாள அட்டைகளை உடனடியாக வழங்கக்கோரி கடகம்பாடி கடைத்தெருவில் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பயனாளிகளின் அடையாள அட்டை உடனே வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதின் பேரில் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பூந்தோட்டம்-கும்பகோணம் சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக கூறி பேரளம் போலீசார், 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.