பெங்களூரு:
2 குழந்தைகள் சாவு
ராமநகர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சன்னப்பட்டணா தாலுகாவில் உள்ள கன்வா அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கன்வா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கால் ஒன்னாபுரா-மானஹள்ளி என்ற கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த 2 கிராமங்களுக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றங்கரையையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து இருப்பதால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன. மாகடி தாலுகா கூடூர் அருகே சேலூர் கூடலூர் கிராஸ் பகுதியில் கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அந்த வீட்டிற்குள் இருந்த மொபின் என்பவரின் பிள்ளைகளான பர்பின் (வயது 4), இஷிகா (3) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
கோவிலை சூழ்ந்த வெள்ளம்
இதுபோல துமகூரு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குனிகல் டவுனில் உள்ள குனிகல் ஏரி நிரம்பி வழிகிறது. அந்த ஏரி எந்த நேரத்திலும் உடையும் அபாயம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். மற்ற தாலுகாக்களில் உள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. வடகர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள ராணி, தோனி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் தாலிகோட் தாலுகாவில் ஏராளமான கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. தாலிகோட் புறநகர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா கோவிலையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
35 பயணிகள் காயம்
பெலகாவி அருகே ஹிரேபாகேவாடி பகுதியில் நேற்று மதியம் பெலகாவியில் இருந்து ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் நோக்கி சென்ற அரசு பஸ் கனமழை காரணமாக சாலையில் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ்சில் பயணித்த 35 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.