மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

அந்தியூர் அருகே தற்கொலை செய்து கொள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதில் அவருடைய உடல் டிரான்ஸ்பார்மரில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.

மின்சாரம் தாக்கியது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பகுதி செம்புளிச்சாம்பாளையம். அங்குள்ள ஒலகடம் ரோட்டில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் செம்புளிச்சாம்பாளையம்-ஒலகடம் ரோட்டில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென அந்த ரோட்டில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார். உடனே அவர் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பியை தன் கையால் தொட்டார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கியது.

அந்தரத்தில் உடல் தொங்கியது

இதில் உடல் கருகிய அவர் இறந்தார். அவருடைய உடல் டிரான்ஸ்பார்மரில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. அந்த நபர் மின்சார கம்பியை தொட்டதால் செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, காட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்துகொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்தியூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.