நாமக்கல்:
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மனைவி ஜெகதாம்பாள். இவர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவர்கள் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா சேதம்
இதுகுறித்து அவர்கள் உடனடியாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேலீசார் கைரேகைகளை சேகரித்து புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.