மாவட்ட செய்திகள்

புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே புதுநடுவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 24-ந் தேதி பூச்சொரிதல் நடைபெற்றது. இதையடுத்து 26-ந் தேதி குடி அழைத்தல், காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி முதல் நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 1-ந் தேதி மாவிளக்கு பூஜையும், பால்குடம் எடுத்தல் மற்றும் சிறப்பு அபிஷேகமும், 2-ந் தேதி அக்னி குண்டம் இறங்குதல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், இரவு பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. விழாவான சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். கிராமத்தின் தேரோடும் வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைந்தது.