மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஊரடங்கை பொதுமக்கள் மீறுகிறார்களா? என்று ஆளில்லா குட்டி விமானம் மூலமாக போலீசார் பிரதான சாலைகளை கண்காணித்தனர்.

திருப்பூரில் ஊரடங்கை பொதுமக்கள் மீறுகிறார்களா என்று ஆளில்லா குட்டி விமானம் மூலமாக போலீசார் பிரதான சாலைகளை கண்காணித்தனர்.

திருப்பூர்

திருப்பூரில் ஊரடங்கை பொதுமக்கள் மீறுகிறார்களா? என்று ஆளில்லா குட்டி விமானம் மூலமாக போலீசார் பிரதான சாலைகளை கண்காணித்தனர். பிரதான சாலைகள் இரும்பு தடுப்புகளால் அடைக்கப்பட்டது. தேவையில்லாமல் சுற்றியவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

கூடுதல் கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கூடுதலாக விதிக்கப்பட்டு வருகிறது. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து செயல்பட்டன.

அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் காலை நேரத்தில் சாலைகளில் அதிகப்படியான வாகனங்கள் சென்றன.

காய்கறி மார்க்கெட்

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு வாடிக்கையாளர்கள் அந்த வட்டங்களின் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

அதுபோல் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டன. காலை 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதன்பிறகும் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றனர். மருத்துவத் தேவைக்கு, அவசர தேவைக்கு என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி இருசக்கர வாகன ஓட்டிகள் திருப்பூர் மாநகரில் சுற்றித்திரிகிறார்கள்.

ஆளில்லா குட்டி விமானம்

இந்த நிலையில் நேற்று திருப்பூர் புஷ்பா ரவுண்டானா சந்திப்பு பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மற்றும் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் ஆளில்லா குட்டி விமானம் மூலமாக பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்தை கண்காணித்தார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு செய்வதை நேற்று ஆய்வு செய்தார். அவினாசி ரோடு, பி.என். ரோடு பகுதி முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டது.

புஷ்பா ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு ஆகிய ரோடுகளில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலான சாலைகள் முற்றிலும் அடைக்கப்பட்டு ஒருவழிப் பாதையாகவே மாற்றப்பட்டு இருந்தன. இ-பதிவு பெற்ற வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு இ- பதிவு முறை கட்டாயம் என்று முக்கிய சாலை சந்திப்புகளில் காவல்துறை மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை இ-பதிவு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

குறுக்கு சாலைகள்

அது தவிர முக்கிய தேவைக்கு மட்டும் செல்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.பிரதான சாலைகளில் வந்து சேரும் குறுக்கு சாலைகள் அனைத்தும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

ஆனாலும் திருப்பூரில் ஏராளமானோர் அவசியமில்லாமல் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் அதிக அளவில் சுற்றி வருவதை காணமுடிகிறது. பிரதான சாலைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதால் போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் விதமாக முக்கிய வீதிகள் வழியாகவும், முட்டு சந்துக்கள் வழியாகவும் பலர் வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

இதை தெரிந்து கொண்ட போலீசார் நகரின் முக்கிய வீதிகளையும் அடைக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று அவினாசி ரோடு, பி.என்.ரோடு, கொங்கு மெயின் ரோடுகளில் உள்ள முக்கிய வீதிகள் அனைத்தையும் இரும்பு தடுப்பான்களால் போலீசார் அடைத்தனர். மேலும் ஒருசில முட்டுச் சந்துக்களும் அடைக்கப்பட்டது. இதன் காரணமாக அவசியமின்றி வாகனங்களில் வெளியே வந்த பலர் எப்படி செல்வது என்று தெரியாமல் அடைக்கப்பட்டிருந்த வீதிகளை சுற்றி, சுற்றி வந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.