மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.

ராணிப்பேட்டை,

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காட்டில் இயங்கி வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் இதன் ஆளுகையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜெயக்குமார் ஓய்வு பெற்றதை அந்த பொறுப்பை உடற் கல்வி இயக்குனர் அமுல்தாஸ் கவனித்து வந்தார். பின்னர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த அசோகன் முழு அதிகாரம் பெற்ற பதிவாளராக (பொறுப்பு) பொறுப்பேற்றார். இவரே தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் தொடர்ந்து இருந்து வந்தார். இந்த நிலையில் அசோகன் பணி நிறைவு பெற்றதையடுத்து அவர் பணியாற்றி வந்த திருவாரூர் அரசு கல்லூரிக்கு திரும்பினார்.

இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டீனாக பணியாற்றி வந்த பெருவழுதி புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை தலைவராக பணியாற்றி வந்த செந்தில்குமார் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் இவர்கள் இருவரையும் மேற்கண்ட பொறுப்புகளில் நியமித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இருவரும் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். புதியதாக பொறுப்பேற்ற இருவருக்கும் பேராசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.