மாவட்ட செய்திகள்

திருவாரூர் கோவிலில் மரகதலிங்கம் திருட்டுப்போன வழக்கில் தடய அறிவியல் ஆய்வாளர் சாட்சியம் விசாரணையை 30–ந் தேதிக்கு ஒத்திவைத்து

திருவாரூர் கோவிலில் மரகதலிங்கம் திருட்டு போன வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் தடய அறிவியல் ஆய்வாளர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம்,

மரகதலிங்கம் திருட்டு வழக்கு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவசேனாதிபதி. இவருடைய வீட்டில் 209.29 கிராம் எடையுள்ள மரகதலிங்கம் இருந்தது. மூதாதையர் காலத்தில் இருந்து வீட்டில் இருப்பதாக கூறி வந்துள்ளார். இந்த மரகதலிங்கத்திற்கு விசேஷ நாட்களில் பூஜை செய்து வந்தார்.

இந்த நிலையில் மரகதலிங்கத்தை விற்பதற்காக கடந்த 4.12.2009 அன்று தேவசேனாதிபதி தனது வீட்டில் இருந்து வெளியே எடுத்து வந்தார். அங்குள்ள அய்யனார் கோவில் அருகே சென்ற தேவசேனாதிபதி, அங்கு நின்ற காரில் இருந்த 5 பேரிடம் மரகதலிங்கம் குறித்து பேசினார்.

மரகதலிங்கம் கைமாறும் தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூரில் முகாமிட்டிருந்த சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று தேவசேனாதிபதியை மடக்கினார்கள். போலீசாரை கண்டதும் காரில் வந்த 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் தேவசேனாதிபதியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த மரகதலிங்கம் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் உள்ள தியாகராஜர் கோவிலில் கடந்த 1992ம் ஆண்டு திருட்டுப்போனது தெரியவந்தது.

இதையடுத்து இந்த மரகதலிங்கம் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் மூலம் திருக்காரவாசலில் உள்ள தியாகராஜர் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடமிருந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் 22 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 14 சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இந்த வழக்கு நேற்று நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மரகதலிங்கத்தை சோதனை செய்த சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வாளர் லதா, அரசு தரப்பில் 15வது சாட்சியாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இந்த வழக்கை வருகிற 30ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.