கோவில்பட்டி,
கோவில்பட்டி
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலையில் நடந்தது. தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் தலைமை தாங்கி, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தியவாறு, எட்டயபுரம் ரோடு வழியாக ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
உறுதிமொழி ஏற்பு
அங்கு உதவி கலெக்டர் டாக்டர் கண்ணபிரான் தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தேசிய வாக்காளர் தின ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் முனியசாமி, தேர்தல் துணை தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் அப்பணசாமி, கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தாசில்தார் ஈசுவரநாதன் தலைமை தாங்கி, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, எட்டயபுரம் ரோடு, மதுரை ரோடு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி, துணை தாசில்தார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதித்தனார் கல்லூரி
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது. ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மேலரதவீதியில் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர். உதவி கலெக்டர் தியாகராஜன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். முன்னதாக செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் மாணவிகள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்.
தாசில்தார் செந்தூர்ராஜன், தேர்தல் துணை தாசில்தார் கோமதிசங்கர், வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், துணை முதல்வர் ஜெயகுமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கதிரேசன், சுந்தர வடிவேல், வசுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பிருந்து ஆட்டோக்களில் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடன்குடி
உடன்குடி பஸ் நிலையம் அருகில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுவினர் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, வில்லிகுடியிருப்பு சந்திப்பு, மெயின் பஜார், பஸ் நிலையம் வழியாக யூனியன் அலுவலகத்தை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்.