தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கழுகுமலையை சேர்ந்த சாமிநாதன் (வயது 38) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்த நிலையில், சாமிநாதன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 16.9.2025 அன்று மேற்சொன்ன நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்ததை அடுத்து போலீசார் தொடர்ந்து சாமிநாதனை தேடிவந்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி, கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. மேற்பார்வையில், கழுகுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சாமிநாதனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.