மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கேட்டு மிரட்டல்: தொழிலாளி தற்கொலை முயற்சி

கந்துவட்டி கேட்டு மிரட்டல்: தொழிலாளி தற்கொலை முயற்சி

திண்டுக்கல்,

எரியோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் முரளி (வயது 21). நூற்பாலை தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.30 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கி இருந்தார். இந்த அசல் தொகையை செலுத்திவிட்டார். ஆனால் வட்டிப்பணம் ரூ.10 ஆயிரத்தை கொடுக்கவில்லை. இதனால் வட்டி தொகைக்கு, மேலும் கந்துவட்டி போட்டு தரவேண்டும் என்று அந்த பெண் கூறியதாக தெரிகிறது.

ஆனால் கந்து வட்டி பணத்தை முரளி தராததால், அவரை அந்த பெண்ணின் உறவினர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முரளி நேற்று காலை வீட்டில் வைத்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.