தூத்துக்குடி,
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதில் 116 கன அடி தண்ணீர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறது. இந்த மாவட்ட மக்களுக்கான 23 குடிநீர் திட்டங்கள், தாமிரபரணி ஆற்றில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில், தற்போது மேற்கண்ட திட்டங்கள் மூலம் 70 சதவீதம் தண்ணீர் மட்டுமே ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
கூடுதல் தண்ணீர் திறப்பு
குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதற்கு கீழ் உள்ள திருச்செந்தூர், ஏரல், நாசரேத், சாயர்புரம், உள்ளிட்ட 6 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையில் 2 அடி தண்ணீர் தேங்கினால் மட்டுமே, இந்த 6 திட்டங்களிலும் தண்ணீர் எடுக்க முடியும். அதற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக 50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள 6 குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனல்மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்துக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனல்மின்நிலையத்துக்கு தனியாக குடிநீர் வினியோகம் செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னையை சேர்ந்த வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அனல்மின்நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுவதாக தெரிவித்து உள்ளனர். தற்போது அணையில் உள்ள தண்ணீர் மூலம் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும். அனல்மின்நிலையத்துக்கு தண்ணீர் கொடுத்தால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் நாட்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
மேலும் திருச்செந்தூர் அருகே ஆலந்தழையில் ரூ.1,000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, திருச்செந்தூர் பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
தடுப்பூசி முகாம்
தட்டம்மை தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. 3 லட்சத்து 82 ஆயிரத்து 376 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும். ஆனால் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 76 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த முகாம் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ரூ.75 கோடியே 67 லட்சம் செலவில் 794 வளர்ச்சி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார், இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக, மாவட்ட மீன்வளத்துறை சார்பில் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையும், காணாமல் போன 2 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சமும், வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ.2 லட்சமும், கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரம் என்பவரின் மனைவி பார்வதிக்கு விதவை மாத உதவித் தொகை ரூ.1,000, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.