மாவட்ட செய்திகள்

நெல்லையில், 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில், பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 15 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். மேலும், இலங்கை தமிழர் சிறப்பு நிவாரண நிதியின் கீழ், விபத்தில் உயிரிழந்த கோபாலசமுத்திரம் முகாமை சேர்ந்த பத்திராஜா என்பவரின் மனைவிக்கு நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு, பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, உதவி ஆணையர் (கலால்) பழனிக்குமார், பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.