மாவட்ட செய்திகள்

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அதிகாரி மீது முறைகேடு புகார் மண்டல இணை ஆணையர் விசாரணை

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அதிகாரி மீது எழுந்துள்ள முறைகேடு புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

முறைகேடு புகார்

திருப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்வரன்கோவில் என்றழைக்கப்படும் விஸ்வேஸ்வரசாமி கோவில் மற்றும் பெருமாள்கோவில் என்றழைக்கப்படும் வீரராகவ பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் செயல் அலுவலராக சிவராமசூரியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் விஸ்வேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோவில் நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக, முறைகேடாக கணக்கு காட்டப்பட்டதாகவும், வீரராகவபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனுமந்தராயசாமி கோவில் உண்டியல் பணம் கடந்த 2 ஆண்டுகளாக கோவில் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் செயல் அலுவலர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இணை ஆணையர் விசாரணை

எனவே கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில் விசாரணை குழுவினர் திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி முன்னிலையில் விசாரணை நடத்தினார்கள்.

இதில் கோவில் செயல் அலுவலர், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கோவில் பணிகளுக்காக கார் ஓட்டிய ஓட்டுனர், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகள், ஆதிஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா நிர்வாகிகள், பிரதோஷ வழிபாட்டு குழுவினர், சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பினர் மற்றும் பொது மக்களிடம் விசாரணை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இது குறித்து சேலம் மண்டல இணை ஆணையர் கூறியதாவது:-

மேல் நடவடிக்கை

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணியின் உத்தரவின் பேரில் நாங்கள் இங்கு விசாரணைக்கு வந்துள்ளோம் அனைத்து தரப்பினரும் கூறிய புகார்களை எழுதி வாங்கி உள்ளோம். இது உடனடியாக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை ஆணையர் எடுப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.