தேர்தல் 2026

திருநெல்வேலி வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்

த.வெ.க.வில் புதிதாக இணைந்தவர்களை திருநெல்வேலி வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் வரவேற்றார்.

நெல்லை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.முருகன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நெல்லை டவுன் பகுதியில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். த.வெ.க.வில் புதிதாக இணைந்தவர்களை வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யின் கொள்கைகள் பிடித்திருப்பதால் தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டதாக புதிதாக த.வெ.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் வெற்றி பெற தீவிரமாக உழைப்போம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.