தேர்தல் 2026

சட்டமன்ற தேர்தல்: அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

தமிழகம், மேற்குவங்கம். அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது.

தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

126 தொகுதிகளை கொண்ட அசாமில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா கூட்டணியும், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன. இங்கு மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச் சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கு கிறது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். இதற்காக தேர்தல் கமிஷன் விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள வாக் குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் மற்றும் கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, தேர்தல் நடைபெறும் இந்த மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் மதுக்கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து, பொது மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.