சென்னை,
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஒதுக்கிய 27 தொகுதிகளில் 5 தொகுதிகளை மாற்றித்தருமாறு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போதுவரை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம், பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வேட்பாளர் பட்டியல் தாமதமில்லை. இந்த தாமதத்தால் பாதிப்பும் இல்லை. நாளை மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வருகிறார். அவர் வந்த பிறகு பட்டியல் வெளியாகும்.
தமிழ்நாட்டில் எந்த தனி மனிதருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லை. தமிழ்நாட்டில் பள்ளிக்கூட வாசல்களிலேயே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
பிரசார பாடல் வெளியிட்டால் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றுவிட முடியுமா? தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல.. ஜீரோ. ஹீரோயின் அல்ல.. ஹெராயின்” என்று தெரிவித்தார்.