சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. 27 இடங்களில் போட்டியிடுகிறது. இதில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மயிலாப்பூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தி.மு.க. கோட்டை விடக்கூடிய தொகுதி இது. தி.மு.க.வின் கோட்டையெல்லாம் கிடையாது. மக்கள் மனதில் அன்பு கோட்டையை கட்டி அதில் சிம்மாசனமிட்டு அமர வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
தேர்தல் நடைமுறைகளின்படி என்னென்ன நடக்க வேண்டுமோ அது நடக்கிறது. ஒருதலைபட்சமாக எதுவும் நடக்கவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக மிகப் பதற்றமாக இருக்கிறார். அமித்ஷாவைப் பற்றி பேசினால் பதற்றம், மோடியைப் பற்றி பேசினால் பதற்றம், இன்னொரு மாநில முதல்-மந்திரி தமிழ்நாட்டிற்குள் வந்தால் பதற்றம்.
தமிழர்களின் உரிமைகளை நாங்கள்தான் மீட்டெடுக்கப் போகிறோம். முதல்-அமைச்சர் திராவிடம் என்று சொல்லி தமிழ் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் விட்டுக் கொண்டிருக்கிறார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.