நெல்லை,
தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, ப்ரிஅதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல் கட்ட பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கி திருச்சியில் முடித்தார்.
தொடர்ந்து 2-வது கட்ட பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இன்று தொடங்கினார்.
நெல்லை பாளையங்கோட்டையில் திமுக வேட்பாளர்களான அப்துல் வகாப், சுப்பிரமணியன், சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, அம்பை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரை பெற்றுள்ள நெல்லைக்கு வந்திருக்கிறேன். அடிமை அதிமுக முதுகில் ஏறி பாஜக நடத்தும் அரசியல் படையெடுப்பில் இருந்து காக்க ஆதரவு கேட்டு வந்துள்ளேன்.
நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம்.
மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் அறிவித்த போது இதை செயல்படுத்தவே முடியாதுனு சொன்னார் இபிஎஸ். இப்போ குலவிளக்குனு ஸ்டிக்கர் ஒட்டிட்டு வந்திருக்காரு. பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார், சொந்தமாகவும் செய்யமாட்டார் என மக்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. திமுகவின் திட்டங்களை எல்லாம் காப்பி அடித்து, புதிய ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார் இபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும். தமிழ்நாட்டைக் காக்க நான் ரெடி.. திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு நீங்க ரெடியா?
கேவலமான அதிமுக ஆட்சியில் இருந்து மீட்டு புதிய விடியலை தந்து நம்பர் 1 மாநிலமாக உயர்த்தினோம்; மலையளவு சாதனைகளை நாம் செய்துள்ளோம்; இவ்வளவு சாதனைகளை செய்த துணிவோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்,
தமிழ்நாட்டில் எப்படி கால் பதிப்பது, தமிழர்களுக்கு துரோகம் செய்ய யாராவது கிடைப்பார்களா என பாஜக வலைவீசி தேடியபோது கிடைத்தவர்தான் துரோகத்தில் டாக்டரேட் வாங்குன பழனிசாமி.
உடநிலை சரியில்லாமல் நினைவாற்றலை இழந்தபோது தனக்கு பிடித்தவர் அண்ணா என சொன்னவர்.கருணாநிதியை யாரும் சிறைவைக்க முடியாது. அவரது இதய சிறையில் நாங்கள் உள்ளோம்.
அண்ணா அருகே கலைஞரை அடக்கம் செய்ய, நானே உங்கள் வீட்டு படியேறி வந்து கையெடுத்து கும்மிட்டு கேட்டேன்.என் தந்தைக்காக அல்ல, தமிழனத்தின் தலைவருக்காக ஒரு சோக சூழலில் கூட உங்கள் முன் நின்றேனே.கலைஞருக்கு கடற்கரையில் இடம் கொடுக்க இரக்கமில்லாமல் மறுத்தவர்தானே நீங்கள். கலைஞர் என்ற பெயரை கூட சொல்ல உங்களுக்கு தகுதியில்லை. 5 முறை ஆட்சி செய்தவர் கருணாநிதி. உங்களை நம்பி பதவி கொடுத்த சசிகலாவின் காலை வாரிவிட்டதுதான் உங்கள் யோக்கியதை. தினகரன், பன்னீர் செல்வத்தை முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம். அவரைப் பற்றி பேச பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. யோக்கியதையும் கிடையாது. உடன்பிறப்புகள் இருக்கும் வரை உங்களால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.