புதுச்சேரி,
புதுச்சேரியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் நேற்று தொடங்கி உள்ளது. வேட்புமனுவை தாக்கல் செய்ய வருகிற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. அதில் 2 நாட்கள் அரசு விடுமுறையாகும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்தசூழலில் புதுச்சேரியில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றன. வருகின்ற சட்டசபை தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரு கட்சிகளின் தலைவர்களிடையே கடந்த வாரம் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், உடன்பாடு எட்டப்படவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கான உறுதிமொழியை வழங்க வேண்டும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினால் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற இரு முக்கியமான நிபந்தனைகளை பாஜக தலைமைக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், லட்சிய ஜனநாயகக் கட்சி தொடர்பான என்.ஆர். காங்கிரசின் நிபந்தனையை பாஜக மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், புதுச்சேரி தனியார் விடுதியில் இன்று காலை நடைபெறவிருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையை ரங்கசாமி புறக்கணித்தார். சுமார் இரண்டு மணிநேரம் காத்திருந்த புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான மன்சுக் மாண்டவியா ரங்கசாமியை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியிருக்கும் சூழலில், நிபந்தனைகள் குறித்து முடிவெடுக்க பாஜகவுக்கு 24 மணிநேரம் ரங்கசாமி கெடு விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து ரங்கசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. என்.ஆர். காங்கிரசின் நிபந்தனைகளை பாஜக ஏற்காவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.