தேர்தல் 2026

பரபரப்பாகும் தேர்தல்களம்.. திருத்தணி முருகன் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் சீமான்

அனைவருக்கும் அரசு வேலை, தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள் உள்பட பல முக்கிய அம்சங்கள் சீமான் வெளியிட்ட வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த 19-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மொத்தம் 49 தலைப்புகளில் வாக்குறுதிகளை சீமான் வெளியிட்டிருந்தார்.

இதில் பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும். படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும். இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். ஆற்று நீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை சீமான் அளித்திருந்தார். மேலும் அனைவருக்கும் அரசு வேலை, தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள் உள்பட பல முக்கிய அம்சங்கள் சீமான் வெளியிட்ட வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 23ம் தேதி) முதல் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதுதொடர்பான சீமானின் முதற்கட்ட பிரசார பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை மறுநாள் திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பின் சீமான் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். தினமும் 4 அல்லது 5 இடங்களில் பிரசாரத்தை சீமான் மேற்கொள்ள உள்ளார்.