சென்னை,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 2-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குற்ற வழக்குகளின் விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்பு மனுவில் 2 வழக்குகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவரது வயது விவரங்களும் சரியாக குறிப்பிடப்படவில்லை என்று தகவல் வெளியானது.
வேட்பாளரின் விவரங்களை சரியாக குறிப்பிடாவிட்டால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு நான்கு செட் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். இதன்படி, விஜய் சரியான தகவல்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தால் இந்த பிழையை சரிசெய்துவிடலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் சார்பில் இன்று கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.