தேர்தல் 2026

பா.ஜ.க.வை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களையும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொடுப்பார் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு, ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:-

“ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எதுவுமே செய்து கொடுக்காத தி.மு.க.விற்கு மக்கள் எதற்காக ஓட்டு போட வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று மு.க. ஸ்டாலின் சொல்கிறார் ஆனால் ஹீரோ இல்லை ஜீரோ.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு சம்பந்தமாக எதுவுமே பேசவில்லை. தமிழ்நாட்டில் மது தவிர பல்வேறு விதமான போதை பொருட்கள் அதிகரித்துவிட்டது அதை ஒழிப்பதற்கு தி.மு.க. வாக்குறுதிகளில் எதுவுமே இல்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் கொடுப்போம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்பங்கள் இருக்கிறது ஆனால் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 லட்சம் பேருக்கு மட்டும்தான் கூப்பன் கொடுக்கும். அந்த கூப்பனை வாங்க தி.மு.க. காரனுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி ரூ.10 ஆயிரம் பணமாக கையில் கொடுப்பார். அது மட்டுமில்லாமல் ஒரு பிரிட்ஜ் கொடுக்க இருக்கிறார்.

பா.ஜ.க.வை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்? வார்த்தைக்கு வார்த்தை பா.ஜ.க., பா.ஜ.க. என்கிறார். தூக்கத்தில் கூட பா.ஜ.க., பா.ஜ.க. என ஸ்டாலின் புலம்பி கொண்டு இருக்கிறாராம். யாராவது தும்பினால் கூட அதற்கு காரணம் பா.ஜ.க.தான் என ஸ்டாலின் சொல்வார்.

எங்கள் கூட்டணியில் மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தேவையான அத்தனை திட்டங்களையும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொடுப்பார்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.