மதுரை,
குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் லாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
மதுரை மாநகரில் குடிநீர் சீராக விநியோகிப்பது தொடர்பாக தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்களுடன், மாநகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடந்தது. ஆணையாளர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினாலும் வைகை அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. எதிர்வரும் வறட்சியை சமாளிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்காக போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிக கட்டணம்
தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் தற்போது எந்தெந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்ற விவரத்தையும், குடிநீர் விநியோகம் செய்யப்படும் லாரிகளின் எண்ணிக்கையும், ஒரு நாளுக்கு எத்தனை முறை விநியோகம் செய்யப்படுகிறது என்ற விவரத்தையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். தற்போது போன்று அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகிக்க முடியுமா? என ஆய்வு செய்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனியார் குடிநீர் லாரிகளின் உரிமையாளர்கள் பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட குளோரின் அளவினை கலந்து சுத்தமாக விநியோகம் செய்ய வேண்டும். மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வின்போது, குளோரின் இல்லாமல் இருந்தாலோ வறட்சியை பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூல் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்களிடமிருந்து எந்தவொரு புகாரும் வராத அளவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும், புதிதாக அமைக்கப்படவுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் மேலும் விவசாய கிணறுகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. வேறு ஏதேனும் பகுதிகளில் குடிநீர் எடுப்பதற்கான வழிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். மதுரை மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்குவதற்கு தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். துணை ஆணையாளர் சாந்தி, நகரப்பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர்கள் அரசு, ராஜேந்திரன், சந்திரசேகர், சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.