தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பெரிய சரக்கு பெட்டக கப்பல் வந்தது. அந்த கப்பலுக்கு துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பெரிய சரக்கு பெட்டக கப்பல் வருகை
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு நேற்று 262 மீட்டர் நீளமுள்ள எஸ்.சி.ஐ. மும்பை என்ற சரக்கு பெட்டக கப்பல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தில் இருந்து வந்தது. 4 ஆயிரத்து 395 சரக்கு பெட்டகங்களை எடுத்து செல்லும் வசதி கொண்ட இந்த கப்பல் தூத்துக்குடியில் சரக்குகளை இறக்கி விட்டு இன்று(வெள்ளிக்கிழமை) கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்டு செல்கிறது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்த இந்த கப்பலுக்கு துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயகுமார், துணை தலைவர் நடராஜன், தலைமை நிர்வாக அதிகாரி எரிக் லாவேனு ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் இந்த சரக்கு கப்பலின் வருகை குறித்து வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயகுமார் கூறியதாவது;-
262 மீட்டர் நீளம் கொண்டது
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இதுவரை 230 மீட்டர் நீளம் கொண்ட 2 ஆயிரத்து 500 சரக்கு பெட்டகங்களை எடுத்து செல்ல கூடிய கப்பல்கள் வந்து சென்றுள்ளன. தற்போது 262 மீட்டர் நீளமுள்ள எஸ்.சி.ஐ. மும்பை என்ற பெரிய சரக்கு பெட்டக கப்பல் முதல் முறையாக வந்துள்ளது.
இந்த கப்பலின் வருகையால் சர்வதேச மற்றும் கடலோர சேவைகளை ஈர்ப்பதற்கும், தூர கிழக்கு, செங்கடல் சேவை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க சேவைகளை பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
4-வது இடத்தில் உள்ளது
மேலும் அவர் கூறுகையில், இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்கு கையாளுவதில் தென்னியாந்தியாவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் 6.42 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளபட்டன. நடப்பு நிதியாண்டில் 25.10.2017 வரை 3.78 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டு உள்ளது.
வ.உ.சி. துறைமுகத்தில் 2 சரக்கு பெட்டக முனையங்களான பி.எஸ்.ஏ. சிக்கால் மற்றும் தக்ஷின் பாரத் கேட் வே டெர்மினல் செயல்பட்டு வருகிறது. ஜனவரி 2018-ல் தக்ஷின் பாரத் கேட் வே டெர்மினல் முழுமையாக செயல்பட தொடங்கும். அதன் பின்னர் 2 சரக்கு பெட்டக முனையத்தின் ஒருங்கினைந்த சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் 1.17 மில்லியனை பெறும்.
2025-26 ஆண்டுகளில் சரக்குபெட்டகம் கையாளும் கணிப்பு 3.28 மில்லியனில் இருக்கும். அப்போது துறைமுகப்பகுதி மற்றும் நுழைவுவாயின் பகுதிகளின் மிதவை ஆழம் 15.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி, துறைமுக நுழைவாயிலை 230 மீட்டர் விரிவாக்கம் செய்யும் பணி 1,2,3,4,5 மற்றும் 6-வது சரக்குதளத்தை வலுவூட்டுதல் மற்றும் 3 மற்றும் 4-வது சரக்கு தளங்களை சரக்கு பெட்டகம் முனையமாக மாற்றப்பட்டு, பெரிய சரக்கு பெட்டக கப்பல்கள் வருவதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.