மாவட்ட செய்திகள்

மீனவர்களுக்கு நிவாரணம் இன்று அறிவிக்கப்படும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

புதுவை தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கான நிவாரணத்தொகையை இன்று (புதன்கிழமை) அறிவிப்பதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

அமைச்சர்கள் ஆய்வு

புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரம் ஆண்டுதோறும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி புதுவை அரசானது, தனியார் நிறுவனம் மூலமாக முகத்துவாரத்தை தூர்வாருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி, மத்திய அரசு நிறுவனமான டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் மூலம் முகத்துவாரம் தூர்வாருவதற்கான பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த பணியானது கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதற்கிடையே தூர்வாரும் எந்திரம் பழுதானதால் முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதமானது. இதனால் மீனவர்களுக்கு பல கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். இதற்கு கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடு காரணம் என புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், அன்பழகன் எம்.எல்,.ஏ. பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சுவாமிநாதன், சுற்றுலா இயக்குநர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கவர்னர் மீது குற்றச்சாட்டு

அதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

துறைமுக முகத்துவாரத்தில் மத்திய அரசின் நிறுவனம் மூலமாக தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இப்பணியானது மிகவும் தொய்வு ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கவர்னர் கிரண்பெடி தான்.

அதேபோல் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகள் கவர்னர் மாளிகையில் தேங்கி உள்ளன. இதுபற்றி கேட்டால் சிறு குறைகளை சுட்டிக்காட்டி கோப்புகளை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால் மக்களுக்கு எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது. ஆனால் தூர்வாரும் பணி 15 நாள்களில் இருந்து ஒரு மாதம் வரை மேலாகும் எனத்தெரிகிறது. இப்பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தால் பணியை விரைவில் முடிக்குமாறு வலியுறுத்தி இருக்க முடியும். மத்திய அரசு நிறுவனம் என்பதால் அவ்வாறு வலியுறுத்த முடியவில்லை. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான நிவாரணத்தொகை இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும். தற்போது அரசுக்கு நிதி நெருக்கடியில் இருப்பதால் விரைவில் அவர்களுக்கான வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைமுக முகத்துவாரத்தில் ஆண்டுதோறும் பல கோடி செலவு செய்து தூர்வாரும் பணி நடக்கிறது. அதற்கு நிரந்திர தீர்வுகாண முகத்துவாரத்தின் அமைப்பை மாற்றி அமைக்க நிபுணர் குழுவிடம் ஆலோசனை பெறப்படும். அதையடுத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் முகத்துவாரம் வரை பாண்டி மெரினா கடற்கரை பகுதியை மேம்படுத்த சாலை வசதி அமைப்பதற்கான பூமிபூஜை நாளை (அதவாது இன்று) நடைபெறுகிறது. இதற்கான ரூ.4.9 கோடியில் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல் சுண்ணாபாறு படகு குழாமிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகள் நாளை (இன்று) நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.