கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகரித்து இருந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ,மாணவிகள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் குவிந்தனர்.
இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, ரோஜாபூங்கா போன்றவற்றை கண்டுகளித்ததுடன் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக் போன்ற பகுதிகளிலும் உற்சாகமாக பொழுது போக்கினர், அத்துடன் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் ஈடுபட்டனர்.
இதனிடையே கொடைக்கானல் நகர் பகுதியில் நேற்று காலை வெயில் கடுமையாக அடித்தது. பின்னர் மாலையில் கடும் குளிர் நிலவியது. இவ்வாறு மாறி வரும் பருவ நிலையை ரசித்த சுற்றுலாபயணிகள் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி நடமாடினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால் பல தங்கும் விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், அவை தெளிவாக தெரியும்படி விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.