ஊட்டி
முழு ஊரடங்கிலும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் பயணம் செய்தனர். வாடகை வாகனங்கள் கிடைக்காததால் தங்கும் விடுதிகளுக்கு அவர்கள் நடந்தே சென்றனர்.
மலை ரெயில் இயக்கம்
தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படும் மலை ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது.
முழு ஊரடங்கில் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு இருந்தாலும், ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்ததால் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்பட்ட ரெயிலில் 5 பெட்டி கள் இணைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 200 இருக்கைகளில் 120 பேர் பயணித்தனர். முழு ஊரடங்கிலும் ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.
வெப்பநிலை பரிசோதனை
ஊட்டி ரெயில் நிலையத்துக்குள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, பெயர், செல்போன் எண் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர். ஊட்டி-குன்னூர் இடையே இயக்கப்பட்ட மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.
மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் ஊட்டி ராஜீவ்காந்தி ரவுண்டானா முன்பு வாடகை வாகனங்கள் ஏதும் கிடைக்குமா என்று தேடி அலைந்தனர். சில தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சுற்றுலா பயணிகள் அவதி
தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்தவர்கள் வாடகை வாகனங்கள், ஆட்டோக்கள் இல்லாததால் லோயர் பஜார், கமர்சியல் சாலை வழியாக தங்களது உடைமைகளுடன் நடந்து சென்றனர். குழந்தைகள், சிறுவர்களுடன் சிறிது கிலோமீட்டர் தூரம் நடந்தபடி சென்றார்கள்.
பொங்கல் விடுமுறை மற்றும் வார விடுமுறையில் பொழுதைப் போக்க ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், முழு ஊரடங்கால் பொழுதை கழிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
இதனால் அவர்கள் தங்கும் விடுதிகளில் முடங்கினர். அங்கு அவர்கள் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தனர்.
போலீசார் அறிவுரை
மேலும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது வாகனங்களில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் தடுத்து விசாரித்தபோது, மருந்தகங்களுக்கு செல்வதாக கூறினர்.
இதனால் போலீசார் அவர்களை வாகனங்களை நிறுத்தி விட்டு மருந்தகங்களுக்கு நடந்து செல்லுமாறும், முழு ஊரடங்கில் வெளியே வரகூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.