மாவட்ட செய்திகள்

தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

கடலூர் மாவட்டத்தில், 10 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடு பட்ட 854 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாட்கள் பொதுவேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் குளோப், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிற்சங்கத்தினர், கட்சி நிர்வாகிகள் சி.ஐ.டி.யு. அலுவலகம் அருகில் ஒன்று திரண்டனர்.

மறியல் போராட்டம்

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் அண்ணா பாலம் அருகில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, . மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மின்சார வாரிய தொ.மு.ச. துணை தலைவர் பழனிவேல், மாவட்ட கவுன்சில் துணை தலைவர் ராஜகோபால், எத்திராஜ், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாதவன் உள்பட தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.யு.டி.யு.சி., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்க, மின்சார தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மறியில் ஈடுபட்ட 140 பேரை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 76 பெண்கள் உள்பட 854 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.