திருவள்ளூர்,
சென்னை எண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மாற்றுத்திறனாளிகள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது;-
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எங்களுக்கு அரசின் சார்பில் வழங்கும் இலவச வீடுகளை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் வழங்க வலியுறுத்தவே மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.