மாவட்ட செய்திகள்

நகை பறிப்பு வழக்கில் திருநங்கைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் முத்தையாபுரம் பகுதியில் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த (திருநங்கை) வசந்தகுமார் (வயது 20) என்பவர் கடந்த 9.11.2025 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த அணிகலன்கள் (நகைகள்) மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) விஜயராஜ்குமார் நேற்று (29.1.2026) மேற்சொன்ன (திருநங்கை) வசந்தகுமார் என்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவல்துறையினர், அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்சொன்ன முத்தையாபுரம் காவல் நிலைய நகைகள் பறிப்பு வழக்கில் சம்பவம் நடைபெற்ற மூன்றே மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.