குன்னம்:
பஸ் மீது லாரி மோதியது
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இருந்து அரியலூர் நோக்கி ஒரு அரசு பஸ் நேற்று காலை வயலப்பாடி- காரைப்பாடி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அரியலூர் மாவட்டம், பெரியத்திருக்கோணத்தில் இருந்து சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக்கொண்டு, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தளவாய் பகுதியில் உள்ள சிமெண்டு ஆலை நோக்கி சென்ற டிப்பர் லாரி, எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முகப்பு கண்ணாடி மற்றும் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள், லாரியின் முன்புற கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகள், லாரி டிரைவர் செந்துறை பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி(வயது 40), பஸ் டிரைவர் கணேசன்(35), கண்டக்டர் ராஜ்குமார், ஒரு குழந்தை உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 8 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், 6 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
லாரி டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த சாலை விபத்தால் அரியலூர்-திட்டக்குடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.