மாவட்ட செய்திகள்

லாரிகள் நேருக்கு நேர் மோதல்

லாரிகள் நேருக்கு நேர் மோதல்

நெகமம்

சின்னேரிபாளையத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேங்காய் லோடு

பொள்ளாச்சி அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சரண் ராஜ்(வயது 27). டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று காலையில் நெகமம் அருகே சின்னேரிபாளையத்தில் இருந்து ரங்கம்புதூர் நோக்கி டிப்பர் லாரியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே மூட்டாம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார்(23) என்பவர் தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரியில் வந்து கொண்டு இருந்தார். இந்த லாரியில் சின்னேரிபாளையத்தை சேர்ந்த சுதாகர்(37) என்ற தொழிலாளியும் இருந்தார்.

3 பேர் படுகாயம்

சின்னேரிபாளையம் மயானம் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, மேற்கண்ட 2 லாரிகளும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் அந்த லாரிகள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் அந்த லாரிகளில் இருந்த சரண் ராஜ், சதீஷ்குமார், சுதாகர் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையில் விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய லாரிகளை சாலையோரத்துக்கு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.