நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே உள்ள வயலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் சாலை அமைத்து அங்கு கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதை அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இணைச்செயலாளர் அன்புச்செல்வம், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் உதயகுமார் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரி ராகுல் சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், எங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் உங்களை அழைத்து பேசுவோம் என உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.