மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு; படகுகள் கரைக்கு திரும்பின

தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்பின.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்பின.

பனிப்பொழிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் இரவில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.

இந்த பனிப்பொழிவு காரணமாக ரோட்டில் வாகனங்கள், விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. ஆனாலும் சிறிது தூரம் மட்டுமே பார்க்க முடிந்தது. எதிரே வரும் வாகனங்களை கூட பார்க்க முடியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த பனி மூட்டம் வேகமாக விலகும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் காலை சுமார் 11 மணி வரையிலும் நீடித்தது.

படகுகள்

இந்த நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 96 விசைப்படகுகள் நேற்று காலையில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன. இந்த படகுகள் சிறிது தூரம் சென்ற போது, கடலுக்குள் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், முன்னால் செல்லும் படகை பார்க்க முடியவில்லை.

வழியை சரியாக பார்க்க முடியாத நிலை உருவானது. இதனால் சில படகுகள் மீண்டும் கரை திரும்பின. அதே போன்று நாட்டுப்படகுகளும் கரைக்கு திரும்பின.