மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாப சாவு

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் காந்தி தெருவை சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவருடைய நண்பர் ரூபன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (31). இவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு கேண்டீனில் வேலை செய்து வந்தார்.

கடந்த 4-ந்தேதி கரையிருப்பில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். பின்னர் இரவில் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.

தச்சநல்லூர் தாராபுரத்தில் உள்ள மதுரை ரோட்டில் சென்ற போது எதிரே வந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் பலத்த காயம் அடைந்தார்.

அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.