மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி பகுதிகளில் திருடப்பட்ட 9 மோட்டார்சைக்கிள்கள் மீட்பு 2 பேர் கைது

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் திருடப்பட்ட 9 மோட்டார்சைக்கிள்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில், மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மருத்துவர் காலனி, நேதாஜி நகரைச் சேர்ந்த இம்ரான் (வயது 24), பாரூக் (37) என்றும், அவர்கள் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி பகுதிகளில் மொத்தம் 9 மோட்டார்சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மோட்டார்சைக்கிள்கள் மீட்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடித்த தனிப்படை போலீசாரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.