மாவட்ட செய்திகள்

உடுமலை-மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

உடுமலை மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தளி

உடுமலை-மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை கவனமாக இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வனவிலங்குகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர அரிய வகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் வளர்ந்து வருகிறது.

வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது. ஆனால் கோடை காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்வதுடன் நீர்வரத்து இழந்து விடுகிறது.

சிங்கவால் குரங்குகள்

இதனால் வன விலங்குகள் உணவு தேவையை பூர்த்தி செய்தாலும் கூட தாகம் தீர்ப்பதற்கு அடிவாரப்பகுதிக்கு வரவேண்டி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. ஆறுகளும் முற்றிலுமாக நீர் வரத்தை இழந்து விட்டன. அதைத்தொடர்ந்து யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, சிங்கவால் குரங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உடுமலை-மூணாறு சாலையில் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. இதனால் அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள சிங்கவால் குரங்குகள் சாலையில் விளையாடி மகிழ்ந்த வண்ணம் உள்ளது. அத்துடன் வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குள்ள மரங்களில் அவை தஞ்சம் அடைந்துள்ளது.

எச்சரிக்கை

மேலும் கடந்த சில நாட்களாக அடிவாரப் பகுதியில் மற்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவது அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.