மாவட்ட செய்திகள்

பழனி அருகே வரதமாநதி அணையில் படகு சவாரி கலெக்டர் ஆய்வு

பழனி அருகே உள்ள வரதமாநதி அணையில் படகுசவாரி விடுவது குறித்து கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

வரதமாநதி அணை

பழனியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கொடைக்கானல் செல்லும் சாலையில் வரதமாநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம், பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆயக்குடி பகுதியின் குடிநீர் ஆதாரமாகவும் வரதமாநதி அணை திகழ்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், பருவமழை பொய்த்து போனதால் வறண்டு விட்ட நிலையில் வரதமாநதி அணையில் மட்டும் தண்ணீர் இருப்பது சிறப்பு அம்சம் ஆகும். 65 அடி உயரம் கொண்ட அந்த அணையில், தற்போது சுமார் 40 அடி வரை தண்ணீர் உள்ளது.

எழில்மிகு காட்சி

பழனி வழியாக கொடைக் கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் அந்த அணையின் எழில்மிகு காட்சியை ரசித்து செல்கின்றனர். இந்த அணை பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. மேலும் அங்குள்ள புல்வெளி பார்வையாளர் களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்தநிலையில் வரதமாநதி அணை பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இதுமட்டுமின்றி அணையில் படகு சவாரி விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று வரதமாநதி அணைபகுதியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உட்கோட்ட அலுவலர் காஞ்சித்துரை, திண்டுக்கல் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமா தேவி, பழனி தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து சுற்றுலாத்துறை அலுவலர் உமா தேவி கூறும்போது, பழனி பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பழனி வரதமாநதி அணையில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்க ஆய்வு பணி நடந்தது என்றார்.