மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது.

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது.

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 33.33 அடி. இந்த அணையின் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் வரட்டுப்பள்ளம் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளும் அணை தண்ணீரிலேயே தாகம் தணிக்கின்றன.

பர்கூர் மலைப்பகுதியே வரட்டுப்பள்ளம் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு மழை பொழியும் போதெல்லாம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

4 அடி உயர்வு

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பர்கூர் தாமரைகரை, தாளக்கரை பகுதியில் 49 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை அணைக்கு 237 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 22 அடி இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 26 அடியாக உயர்ந்து உள்ளது.

பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை விரைவில் நிரம்பும் என்று அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.