மாவட்ட செய்திகள்

ரூ.7,502 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டம் வெர்சோவா- பாந்திரா இடையே கடல்வழி பாலம்

மும்பையில் வெர்சோவா- பாந்திரா இடையே கடல்வழி பாலம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.

மும்பை,

மும்பையில் வெர்சோவா- பாந்திரா இடையே ரூ.7 ஆயிரத்து 502 கோடி செலவில் கடல்வழி பாலம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.

சட்டசபை கூடியது

மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று மும்பையில் தொடங்கியது. இதையொட்டி, இரு அவை உறுப்பினர்களும் பங்கேற்ற கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:-

நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டில் சுமார் 50 சதவீதத்தை மராட்டியம் கொண்டிருப்பதால், அன்னிய நேரடி முதலீட்டின் விருப்ப இலக்காக மாநிலம் திகழ்கிறது. அன்னிய நேரடி முதலீட்டில் கூடுதல் பங்களிப்பை பெறவும், பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடவும், நீடித்த வளர்ச்சி திட்டங்கள், சந்தை ஆதரவு, பயிர் காப்பீடு, நீர் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் விவசாய பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் நல திட்டங்களை அரசு தொடங்கி இருக்கிறது.

மண் சுகாதார அட்டைகள்

விவசாயிகளின் துயரத்தை குறைப்பதிலும், விவசாய பொருட்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும் இத்திட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அத்துடன் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கவும் இந்த திட்டங்கள் பங்களிப்பு செய்யும்.

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்ட நடைமுறையில் மராட்டியம் முன்னிலை வகிக்கிறது. பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ், சுமார் 1 கோடியே 8 லட்சம் விவசாயிகள் தங்களது பெயரை பதிவு செய்திருக்கின்றனர். உரங்கள் சீராகவும், திறம்படவும் பயன்படுத்தப்படுவதை உறுதிச்செய்யும் பொருட்டு, விவசாயிகளுக்கு சுமார் 80 லட்சம் மண் சுகாதார அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

தானியங்கி வானிலை நிலையம்

விவசாயிகள் துல்லியமான காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு வருவாய் சரகத்திலும் தானியங்கி வானிலை நிலையத்தை அரசு ஏற்படுத்தும்.

நிறைவேற்றப்படாமல் இருக்கும் 26 நீர்ப்பாசன திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. இது கூடுதலாக 5 லட்சத்து 56 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பாசன திறன் அளிக்கும்.

கடல்வழி பாலம்

மும்பையில் பாந்திரா- ஒர்லி கடல்வழி பாலத்தின் விரிவாக்க திட்டமான வெர்சோவா- பாந்திரா இடையே ரூ.7 ஆயிரத்து 502 கோடி செலவில் கடல்வழி மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. நவிமும்பையில் பேலாப்பூர்- பெந்தார் மெட்ரோ ரெயில் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு விரைவில் பணி ஆணை பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு வித்யாசாகர் ராவ் பேசினார்.

முன்னதாக சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை சபாநாயகர் ஹரிபாவு பக்டே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.