மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் 30 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி

மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் 30 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி காலை முதல் இரவு வரை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் 30 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள மடப்பள்ளியில் நடந்து வருகிறது.

இதற்காக சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த லட்டுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டதும் நாளை மறுநாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.