ராமநாதபுரம்
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
விழிப்புணர்வு நடவடிக்கை
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தேர்தலில் வாக்களிக்கவும், முதன்முறையாக வாக்களிப்பவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களிக்க ஊக்குவிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறவும், வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்கவும் வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள்
அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட பல்வேறு மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்று கையெழுத்திட்டனர். தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.