கருத்து கேட்பு கூட்டம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர் ஆகிய 6 நகராட்சிகள் வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள், அரசியல் கட்சியினருடனான கருத்து கேட்பு கூட்டம் சென்னையை அடுத்த தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வரவேற்றார். வார்டுகள் வரையறை குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகள் கமிஷனர் செல்வராஜ், மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுந்தரவல்லி, மாவட்ட கலெக்டர்கள் ஆல்பி ஜான்வர்கீஸ்(திருவள்ளூர்), ராகுல் நாத்(செங்கல்பட்டு), ஆர்த்தி(காஞ்சீபுரம்), பாஸ்கர பாண்டியன்(ராணிப்பேட்டை) ஆகியோர் விளக்கினர்.
கோரிக்கை மனு
வார்டுகள் வரையறை குறித்து மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார் தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் கலந்துகொண்டு தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளை மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமாரிடம் மனுக்களாக அளித்தனர்.
இதில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
குளறுபடிகள்
கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கூறும்போது, வார்டு மறுவரையறை பல குளறுபடிகளுடன் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற பல வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளது என்றார்.
பா.ஜ.க. மாவட்டதலைவர் வேதசுப்பிரமணியம் கூறும்போது, பல இடங்களில் தெருக்கள் வார்டு வரையறை பட்டியலில் விடுபட்டுள்ளது என்றார். தி.மு.க. தாம்பரம் நகர மன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ் கூறும்போது, வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் அளித்த புகார்கள் மனுக்களாக கொடுத்துள்ளோம். விடுபட்ட தெருக்களை சேர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
அதேபோல் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஆம் ஆத்மி, த.மா.கா. உள்பட பல்வேறு கட்சியினரும் தங்கள் கோரிக்கைகள், கருத்துகளை தெரிவித்தனர்.