மாவட்ட செய்திகள்

உடன்குடி அருகே 40 ஆண்டுகளுக்கு பின் குளத்துக்கு தண்ணீர் வந்தது விவசாயிகள் மகிழ்ச்சி

40 ஆண்டுகளுக்கு பின் குளத்துக்கு தண்ணீர் வந்தது

உடன்குடி:

உடன்குடி அருகே, 40 ஆண்டுகளுக்கு பின் குளத்துக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிரம்பும் குளம்

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை ஊராட்சி பகுதியில் மெஞ்ஞானபுரம் செல்லும் பாதையில் மாநாட்சிகுளம் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்தது.

பருவமழை சரியாக பெய்யாததாலும் இப்பகுதியில் உள்ள பெரிய குளங்களுக்கு முறையாக தண்ணீர் வராததாலும் இந்த குளத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு இக்குளம் முழுமையாக தோண்டப்பட்டு, நரிக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயில் இருந்து இக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது இக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மாநாட்சிகுளத்தின் கரைகளை உயர்த்தி கூடுதலாக தண்ணீர் தேக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, இக்குளம் முழுமையாக நிரம்பினால் 100 ஏக்கரில் விவசாயம் செய்யலாம். 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்ட வெற்றிலை, வாழை, கத்தரிக்காய், மிளகாய் போன்ற பயிர்களை பயிரிடுவோம். மேலும் குளம் முழுமையாக நிரம்புவதற்கு தண்ணீர் விட வேண்டும், என்றனர்.

...........