வாழப்பாடி,
வாழப்பாடி சிலோன் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 25). இவர் சேலம்-ஆத்தூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கோகிலா, மாரியம்மாள் என இரு மனைவிகள் உள்ளனர். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல், மாரியம்மாளை 2-வதாக திருமணம் செய்து கொண்டதால் முதல் மனைவி கோகிலா சக்திவேலை விட்டு விலகி சென்றுவிட்டார்.
இந்தநிலையில், ஆத்தூர் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி, சக்திவேல் கண்டக்டராக வேலை பார்க்கும் பஸ்சில் சென்று வந்தார். அப்போது சக்திவேலுக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதை மறைத்த சக்திவேல், விஜயலட்சுமிக்கு திருமண ஆசைக்காட்டி, தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவருக்கு வேறு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்பது குறித்தும் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.